Thursday, 29 April 2010

திருஷ் : கயல்விழி - பாகம் 3


உரிய இடத்திற்குப் போவோமா அல்லது வழியிலேயே மடிந்து போவோமா என நினைத்தவர்களுக்கு மனதளவில் தைரியத்தை ஏற்படுத்தியது. ஒருசில மணி காத்திருப்பின் பின்பு அவர்களை சிறிய ரக வாகனம் ஒன்றில் ஏற்றி வடமராட்சியில் கொணர்ந்து விட்டார்கள். இதுவரை சந்தித்த சவால்களிலும் பார்க்க கயல்விழியை கண்டுபிடிப்பதே அவனுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது.


வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் இளங்கோ விசாரிக்கத்தொடங்கினான். கோவில் மடம் ஒன்றிலேயே தங்கவைக்கப்பட்டதால் மிகவும் அஷொகரியமாக இருந்தது. பெண்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. கஷ்டத்திலும், கஷ்டம். வீடு நிறைய அரிசி மூட்டைகள், காய்கறி தோட்டங்கள் என இருந்தவர்கள் எல்லாம் நிவாரண போருட்களுக்கு கையேந்தவேண்டிய நிர்ப்பந்தம்.


இரண்டு வாரகாலத்தின் பின்பு, இளங்கோவின் பண்பு கண்டு கோவிலில் பணிபுரியும் ஒரு முதியவர் தனது வீட்டின் அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய வீட்டை அவர்கள் தங்குவதற்கு கொடுத்திருந்தார். ஆதலால் சற்று நின்மதியான தூக்கத்தை அரவனைத்தாலும் அவர்களுக்கு ஊரைவிட்டுப் பிரிந்த ஏக்கம் சற்றும் குறையவில்லை. தண்ணீர் பஞ்சம் தான் அதிகம். இரண்டு அல்லது மூண்று மைல்கள் சென்று துவிச்சக்கர வண்டியில் எடுத்து வர வேண்டும். என்றாளும் பரவாயில்லை மற்றைய ஜனங்கள் படும் பாட்டை விட நாம் நல்லாகவே உள்ளோம் என இளங்கோ அடிக்கடி கூறுவான்.


தற்காலிக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்களுடைய வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. பணம் உள்ளவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பிரத்தியேக ஆசிரியர்களை வரவளைத்து கற்றுக்கொடுத்தார்கள். வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்குச்செல்ல ஆரம்பித்தனர். கையில் கொண்டு சென்ற பணம் எல்லாம் தீர்ந்தது. ஒரு நிலையில் செய்வது அறியாத இளங்கோ, அம்மா எனக்கு மேற்கொண்டு படிக்க முடியவில்லை, நான் ஏதோகிடைக்கின்ற வேலைக்குப் போகின்றேன், அபோது தான் உங்களை என்னால் பார்க்க முடியும் என்றான், தெய்வானையோ இல்லை ராசா நீ உன் படிப்பை விட்டு வேலைக்குப் போகாதே என வற்புறுத்தியும் இளங்கோ மசியவில்லை. தாய்படுகின்ற துன்பத்தை பார்க்க இயலாதவன் சிறிய கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான், கிடைக்கின்ற சிறு வருவாயில் காலத்தைப் போக்கினான். மாதங்கள் உருள ஆரம்பித்தன, கயல்விழியின் தகவல் ஏதும் கிடைக்கப் பெறாமல் தவித்தான். கிடைக்கின்ற நேரம் எல்லாம் தேட ஆரம்பித்தான். பயன் ஏதும் இல்லை.


ஒரு நாள் அவன் பணிபுரியும் கடையில், அண்ணே! வன்னியில் இருந்து கொணர்ந்த தேங்காய் இருக்கு வேனுமோ? என ஒரு குரல். இக்குரலை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு என நினைத்த இளங்கோ, சற்றேன திரும்பிப்பார்த்தான். என்ன ஆச்சரியம். பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி, ஆரைக்கான நினைத்தானோ, அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஆம் அது கயல்விழியின் தந்தை மாணிக்கம் தான். மாமா என அழைத்தவன் ஓடிசென்று. வாங்கோ மாமா நான் உங்களைத் தேடாத இடமில்லை, எப்படி கயல், மாமி எல்லோரும் இருக்கினம். இவ்வளவு காலமும் எங்கே இருந்தநீங்கள் என வந்தவரைப் பேசவிடாது அவனே பேசினான். ஓம் ராசா அது ஒரு பெரிய கதை, நாங்கள் இங்க இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது ஆகாய மார்க்கமாக வந்த இரண்டு போர் விமானங்கள் மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக கைதடி, மற்றும் வடமராட்சி நோக்கி தாக்குதலை ஆரம்பித்தது, பலாலியில் இருந்தும் கூவிக்கொண்டு தலைக்கு மேலால போகத்தொட்ங்கிற்று, பின்னே போற சனத்தோடு சனமாக வன்னிக்குப் போய்விட்டோம் என்றார். அங்கே எல்லோரும் நல்ல சுகம். தொழில் தான் என்ன செய்கின்றது என்று தெரியவில்லை பின்னே இந்த தேங்காய் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டேன் என்றார்.


அப்போது! தம்பி.... உங்க நின்று பேசிக்கொண்டிருந்தால் யார் தான் வேலையைக்கவனிக்கின்றது என முதலாளி சிலிர்த்தார். அப்போது தான் மாணிக்கத்திற்கு புரிந்தது அது இளங்கோ வேலை செய்யும் கடை என்று. மாணிக்கம் ஒரு கணிதபாட ஆசிரியர். அவருக்குத் தெரியும் இளங்கோவின் திறமை, இருந்தும் யார் தான் யாருக்கு அந்த சூழலில் உதவ முடியும். இதை நினைத்து மாணிக்கம் மனதிற்குள் நோந்து கொண்டார். ஒரு நிமிடம் மாமா இதோ வருகின்றேன் என்று சென்ற இளங்கோ திரும்பி வந்தான், மாமா நாங்கள் அடுத்த தெருவில 28ம் இலக்க வீட்டில் தான் இருக்கின்றோம்.

நீங்கள் வீட்டுக்கு போய் அம்மாவைப் பாருங்கோ நான் வேலையை முடித்துவிட்டு வருகின்றேன் என மாமனை வழி அனுப்பிவைத்தான்.

அவ்வாறே வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
 
தொடரும்....
 
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.

No comments:

Post a Comment