அம்மா சீக்கிரமாக கிளம்புங்கோ, எல்லோரும் போட்டினம். நாங்கள் தான் கடைசி. அம்மம்மாவை அவங்கள் தங்கட வாகனத்தில ஏத்திக்கொண்டுபோய் வடமராட்சியில இறக்கிறாங்களாம். மற்ற ஆட்கள் தங்கட பாட்டில தான் போகவேனும், நீங்கள் தேவையான முக்கிய எல்லாப்பொருட்களையும் எடுத்துவையுங்க்கோ நான் அம்மம்மாவை அவங்கட வாகனத்தில ஏத்திப்போட்டு வாறன். என்றவாறே இளங்கோ அவனது அம்மாவினது வயது முதிர்ந்த தாயாரை அழைத்துச்சென்றான்.
தெய்வானை தேவையான எல்லாப் போருட்களையும் மனதுக்குள் ஏதோ முனகிக்கொண்டு எடுத்து வைத்தாள். திரும்பி வந்தவன் தனது இருசக்கர வண்டியில் எல்லாப்பொருட்களையும் வைத்து கட்டத்தொடங்கினான்.
இளங்கோ சிறுவயது முதலே தனது ஊரை விட்டுப்போனதில்லை இதுவே முதல் தடவை. அவன் தனது ஊரையும் ஊர்மக்களையும் மிகவும் நேசிப்பவன், செல்லப்பிராணிகளிடம் மிகவும் அன்பாக பழகுபவன். காலத்தின் கட்டாயம் அவனையும் போகவைத்தது.
இளங்கோ சிறுவயது முதலே தனது ஊரை விட்டுப்போனதில்லை இதுவே முதல் தடவை. அவன் தனது ஊரையும் ஊர்மக்களையும் மிகவும் நேசிப்பவன், செல்லப்பிராணிகளிடம் மிகவும் அன்பாக பழகுபவன். காலத்தின் கட்டாயம் அவனையும் போகவைத்தது.
இளங்கோ, அந்த மாட்டையும், கண்டையும் அவிழ்த்து விடு. நான் தொட்டி நிறைய தண்ணீரும், தேவையான வைக்கோலும் எடுத்து வைத்திருகிறன் என்றாள் தெய்வானை. கட்டிமுடித்த இளங்கோ முறையே செய்யத்தொடங்கினான். அப்போது அவிழ்த்து விடுவதற்கு மனமற்றவனுக்கு ஒரு சிந்தனை உதித்தது, அம்மா இவைகளையும் எங்கலோடு நடத்தி கூட்டிக்கொண்டு போவமா? பாவங்கள் தானே, எப்படி அனாதையாக விடுவது என்றான். ஓ மடா நீபோய் இருக்கிறதிற்கே இடம் இருக்கோ தெரியாது அதில வேற இதுகளையும் கொண்டுபோனால் யார்தான் உனக்கு இருக்க இடம் கொடுப்பினம் என்றாள் தெய்வானை. கண்கலங்கியவனாய் வேறு வழி இன்றி அவைகளை அவிழ்த்து விட்டான் இளங்கோ.
அப்போது அயல் தெருவில் வசிக்கும் கயல்விழி கூப்பிடும் சத்தம் கேட்டு யாரது என தெய்வானை வினாவினால். மாமி இன்னமும் என்ன செய்துகொண்டு இருக்கிறியள் எல்லாரும் ஊரை விட்டுப்போய்விட்டினம், நாங்களும் போகப்போறம் அதுதான் அம்மா சொல்லச்சொன்னவா சீக்கிரமாக கிளம்புங்கோ, நான் போறன் என்றவளுக்கு, போறன் இல்லை போய்வாறன் எண்டு சொல்லு புள்ள, சரி நீ முன்னுக்குப்போ நாங்கள் பின்னாடி வாறம் என்றாள் தெய்வானை. சரி மாமி என்றவள் சிறு புன்னகையுடன் இளங்கோவிடம் விடைபெற்றுச்சென்றாள். பிரச்சனையின் வீரியம் தெரியாத இளங்கோவும், தெய்வானையும் மெதுவாகவே புறப்பட்டார்கள்.
போகின்ற பாதை எல்லாம் ஆரோ பின் தொடர்வது போல் ஓர் உள் உணர்வு. இனம் புரியாத பயம். ஆள் நடமாட்டம் கண்னுக்கு எட்டிய வரைக்கும் இல்லை. பாதை எங்கும் சிதறல்களும், மூச்சுத்திணற வைக்கின்ற துர்நாற்றமும். இவை எல்லாம் கண்டு அஞ்சாதவனாய் பயணம் தொடர்கின்றது. அவன் சுமக்கும் சுமை அவனை விட பெரிதாக தென்பட்டது. மெதுவாக தவழ்ந்து வந்த தென்றல் உடலை சிலிர்த்திடவைத்தது. அவனது மனமோ அவன் ஆசையாக வளர்த்த பூவரசம் இலை வடிவ வெண்ணிற நெத்திச்சுட்டியுடன் துள்ளி துள்ளி அவனையே தேடும் கண்றுக்குட்டியை பற்றியே யோசித்தது, இப்போ எங்க எப்படி இருக்கும் என்று.
மணி ஊர் தாண்டி வரும் வரைக்கும் பின்னால் ஓடி வந்தான் இப்போ அவனையும் கானல, இரண்டு வருடங்களுக்கு முன்பு வயல் காட்டிற்கு செல்லும் வழியில் அனாதையாக நின்ற நாய் குட்டியின் பெயர்தான் மணி. அம்மா மணியைக் கானேல என்றவன் திரும்பிப்பார்க்கும் போது தெய்வானை தலையை பிடித்துக்கொண்டு நின்றாள். அம்மா என்னாச்சு என்றவன் இருசக்கர வண்டியை மரத்தில் சாய்த்து நிறுத்தியவன் தண்ணீருடன் ஓடினான். இல்ல ராசா, லேசாக தலை சுற்றுது என்றவள் பாதையோரமாக உட்காந்தாள். சற்று நிமிடம் கழித்து அம்மா மெதுவாக நடவுங்கோ ஏதேனும் பிரச்சனை வரமுன் போய்ச்சேருவம் என்றான் இளங்கோ.
பயணம் தொடர்கிறது, சிறிய சிறிய வேட்டுச்சத்தங்கள் தூரத்தே கேட்பதை உணரமுடிகிறது. நெருங்கி செல்ல செல்ல சத்தம் கனக்கின்றது. இப்போது தான் இளங்கோ பிரச்சனையின் வீரியத்தை உணரத் தொடங்கினான். வழியில் முன்பு மிருகங்களின் உடலைப்பார்த்தவனுக்கு இப்போது மனித உடலங்களையும் காணக்கூடியதாக இருந்தது. கடவுளை மனதிற்குள் திட்டித்தீர்த்தவனுக்கு, கயல்விழியின் ஞாபகம் வந்தது.
தொடரும்....
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்.
No comments:
Post a Comment